சூழல் மாசாக்கமும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களும்

01. சூழல் பற்றிய அறிமுகம்:
மனிதனைச் சுற்றயுள்ள இயற்கையின் மொத்த அம்சங்கள் ‘சூழல்” எனலாம். நாள்தோறும் நாம் காண்கின்ற எம்மைச் சுற்றியுள்ள சகல அம்சங்களையும் சூழல் என்பது குறித்து நிற்கும். அந்தவகையில் ‘சூழல்” என்பது உயிர்வாழும் அங்கிகளுக்கு (ORGANISISMS) இடையில் காணப்படும் நிலைமைகளின் மொத்த கூட்டு என வரையறுக்கபடும். உயிரற்றனவாகிய பௌதீக, இரசாயன அசேதனங்களுக்கும் (ABIOTIC) உயிர் வாழும் சேதனங்களின் (BIOTIC) பரிமாணங்களுக்கும் இடையிலான இடையீடுகளின் விளைவே இச்சூழல் நிலைமைகளாகும்.  இச்சூழல் இரண்டு வகைப்படும்.
01.    பௌதீக சூழல்/ இயற்கை சூழல்
02.    பண்பாட்டு சூழல்  /மனிதனால் உருவாக்கப்படும் சூழல்

இயற்கை சூழல்

பண்பாட்டு சூழல்
பௌதீகசூழல் எனும்போது தரைத்தோற்றம், வடிகாலமைப்பு, காலநிலைத்தன்மைகள், தாவரங்கள் என்பன அடங்குகின்றன. பண்பாட்டுச்சூழல் எனும்போது பயிர்ச்செய்கை அம்சங்கள், நகரச் சூழல் அம்சங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட தெருக்கள் என்பனவற்றோடு இவற்றில் வாழுகின்ற சமூகச்சூழல் அம்சங்களையும் குறிக்கும். சூழல் எனும் பதமானது விபரண ரீதியாக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதை வரையறை செய்வது மிகவும் கடினமாகும். அண்மைக்காலங்களில் மனிதனைச் சூழ்ந்து காணப்படும் பௌதீக, பண்பாட்டு அம்சங்களுக்கு வழங்கப்படும்  மறுபெயரே சூழல் எனப்படும். சுற்றுச்சூழல், சுற்றாடல், சூழல் என்பன ஒரே கருத்துடைய சொற்களாக வழங்கி வருகின்றன.
சூழல் என்னும் விடயத்தில் சூழலியல், சூழல், சூழற்றொகுதி போன்ற சொற்பதங்கள் முக்கியமானவை. சூழலியல் என்பது சூழலுக்கேற்ப உயிரினங்களின் இசைவாக்கம் பற்றிய அறிவை வழங்குகின்ற கற்கைநெறியாகும். 19ஆம் நூற்றாண்டிலேயே சூழலியல் பற்றிய கருத்துக்கள் வலிமை பெற்றாலும், 1868ஆம் ஆண்டு ஜேர்மனிய உயிரியலாளரான ஏர்னற் ஹேர்க்கீல் (ERNST HAECKEL) என்பவரே முதன்முதலில் இது பற்றி கருத்து தெரிவித்தார். “தாவரங்களும் சூழலுடனான அவற்றின் தொடர்புகளும்” என்ற ஆய்வில் பயன்படுத்தப்பட்டடுள்ளது. இச்சொல்லானது OIKOS (House), LOGOS என்ற இரு கிரேக்க சொற்களில் இருந்து பெறப்பட்டது. அதன் கருத்து வாழ்வதற்கான வீடு அல்லது இடம் என்பதைக் குறிப்பதாகும். சூழலிற் காணப்படுகின்ற அங்கிகளின் பரவல் தொழிற்பாடு, அவற்றின் எண்ணிக்கை, சூழலுக்கும் அங்கிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பன சூழலியலில் முக்கியம் பெறுகின்றன.
அடுத்து சூழல் என்பது உயிர்ப்பகுதிகள் உயிரற்ற பகுதிகள் இணைந்த விடயஙமாக காணப்படுகின்றது. உயிரற்ற பௌதீகச்சூழலிற் காணப்படுபவை மண், நீர், வெப்பம், வளிமண்டல நிலைமைகள் போன்றனவாகும். சமுத்திரங்கள், காடுகள், புல்வெளிகள், நன்னீர் நிலைகள் என்பவற்றிற்கேற்ப சூழற்தன்மைகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. மேலும் பாமர்,வெரேனியஸ் ஹன்டிங்டன் போன்ற ஆய்வாளர்களும் சூழல் பற்றிய வரைவிலக்கணம் அறிஞர்களால் வரையறுக்கப்பட்டிருந்த போதிலும் இவ் எல்லைகள் காலத்திற்கு காலம் விரிவடைந்து நிலம், நீர், வளிமண்டலம், நட்சத்திரக்கூட்டங்கள் என்ற முழு உலகையும் சூழல் என்னும் எல்லைக்குள் உள்ளடக்கியுள்ளது.
சூழற்றொகுதியை நோக்கின் யாதாயினும் வரையறைக்குட்பட்ட பிரதேசத்தில் நிலவுகின்ற பௌதீகச் சூழலையும் அச்சூழலின் இயல்புக்கேற்ப வாழும் அனைத்து அங்கிகளையும், அவ்வங்கிகளுக்கும் சூழலுக்கும் இடையே காணப்படும் அனைத்து இடைத்தொடர்புகளையும் கூட்டாக நோக்குவதாகும். மில்லியன் கணக்கான தாவர, விலங்கின நுண்ணுயிர்களின் இணைவுத்தன்மையிலே பூமியில் வாழும் வாழ்க்கை தங்கியுள்ளது. உயிரினத் தோற்றத்திற்கும் நிறைவேற்றுத் தன்மைக்கும் சூழலமைப்பே காரணமாகும். பல்வேறு வகைப்பட்டதும், தொடர்ச்சியானதுமான தொடர்புகள் மூலம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்கின்றது.
02.     சூழலின் முக்கியத்துவம்:
உலகளாவிய ரீதியில் அநேக துறைகளில் இன்று சூழல் கல்வி  முக்கிய இடம்பெறுகின்றது. இதற்கு அடிப்படைக்காரணம் அண்மைக்கால உலக சூழல் நெருக்கடியாகும். சர்வதேச சமூகத்தின் சூழல் பற்றிய ஈடுபாட்டை இனங்காண ஐக்கிய நாடுகள் சபையினால் 1972 ம் ஆண்டு ஸ்ரோக்கம் நகரில் நடைபெற்ற முதலாவது சூழல் மாநாட்டைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட உலக சூழல் தினமான ஜூன் 5 உம், 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் றியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவியுச்சி மாநாடும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும். உலகின் சுற்றுப்புற சூழ்நிலையை நோக்குவோமாக இருந்தால் 1960 களின் முற்பகுதியில் மனிதன் முதன்முதலாக தன்னுடைய சுற்றுச் சூழலைத் தொடர்புபடுத்தி அக்கறையாக சிந்திக்கத் தொடங்கினான். அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் மிக நீண்ட காலமாக சுற்றுச் சூழலைப்பற்றி விவாதித்து வருகிறான். இன்று கொள்கை வகுத்தலின் வெவ்வேறு சந்தர்ப்பத்திலும் பிரயோகிக்கப்படுகின்றது.
இயற்கையையும் சுற்றுச் சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்வுக்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை  வளங்களையும் சுற்றுச் சூழலையும் எந்தத் தேவைக்குப் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும் என்பது எவ்வளவு உணரப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு அவை பயன்படுத்தும் போதும் பொருளின் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் சிக்கலான கோட்பாடுகள் அரசியல் மற்றும் சமூகவியல் போன்ற துறைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். இங்கு இவை அனைத்திலும் கூட்டுச்சேர்க்கையின் விளைவாக சுற்றுச்சூழலில் ஒரு சிக்கலான நிலை தோன்றுகின்றது.
இதன் விளைவாக தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. இந்த விடயத்தில் உள்ள சிக்கல்தன்மை, பாதகத்தன்மை மற்றும் இதன் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கின்றது. அபிவிருத்தியைப் பற்றிக் கருதும்போது பொருளாதார, அரசியல் மற்றும் சமூகவியல்சார் அழுத்தங்கள் அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் அதே வேளை அந்தக் காரணிகள் மிகவும் சிக்கல் தன்மை வாய்ந்ததாகவும் எம்மால் சிறியளவே விளங்கி கொள்ளப்பட்டவையாகவும் காணப்படுகின்றது. சுற்றுச்சூழல் என்ற விடயத்திற்கும் அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாகவும் விளங்கிக் கொள்வதற்கு கடினமானதாகவும் காணப்படுகின்றது. இதற்கு காரணம் மனிதன் சுற்றுச் சூழலின் இயற்கைச் சமநிலையைப்பற்றி பூரணமாக அறியாமல் இருப்பதாகும். அண்மைய காலங்களில் விஞ்ஞானத்துறையானது. மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் எம்மால் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் சம்மந்தமான அறிவை இன்னும் பூரணமாக பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல இந்த அறிவை வளங்களைப் பயன்படுத்தல் மற்றும் அவற்றினைப் பேணுதல் போன்றவற்றிலும் மற்றும் அபிவிருத்தி, நின்று நிலைக்கும் பயன்பாடு போன்றவற்றிலும் கூட எம்மால் பூரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது.
சுற்றுச் சுழலியல் என்ற கோட்பாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுற்றுச் சூழலைப் பேணல் மற்றும் நின்று நிலைக்கும் பயன்பாடு ஆகியவற்றில் இருந்தே தோன்றின. ஆனால் அவை தற்போது அந்தக் குறிக்கோள்களின் உண்மையான நோக்கங்களில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட தடுமாற்றங்களாகும். இத்துடன் இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற ஒரு கோட்பாடு கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சுற்றுச் சூழலுடன் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு துறையினையும் எடுத்துக்கொண்டாலும் கூட அந்தத் துறைகளினுள் அகமுரண்பாடுகளும்  வெவ்வேறு துறைகளுக்கிடையிலான முரண்பாடுகளும் காணப்படுவதால் ஒரு மோதலான நிலை தோன்றுகின்றது.
03.      சூழல் மாசடைதல்:
உலகளாவிய ரீதியில் நாடுகளை பொதுவாக அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள், என பிரிக்க முடியும். இத்தகைய இரண்டு வகையான நாடுகளிலும் குடித்தொகை அதிகரிப்பு, நகராக்கவிருத்தி, கைத்தொழில் மயமாக்கம் என்பது பொதுவாகக் காணப்படும் விடயமாகும். குடித்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே மனிதன் தனக்கு ஏற்படும் தேவைகளை நிவர்த்தி செய்ய முற்படும் போது அதன் விளைவாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகவே சூழல் மாசடைதல் என்பது காணப்படுகின்றது.
சூழல் மாசடைதல்

இயற்கைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தால் குழப்பப்படும் போது அது சூழல் தொகுதியில் அல்லது சுற்றாடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான பெரும்மாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும். இன்னொரு வகையில் கூறினால் இயற்கை சூழல் என்பது தூய்மையானது, ஆனால் பலவகைப்பட்ட மனித நடவடிக்கைகளினால் அச்சூழலானது மாசாக்கப்படல் அல்லது இயற்கை வட்டங்கள் அல்லது இயற்கை சமநிலை பாதிக்கபடுதலானது. சூழல் மாசடைதல் எனப்படும்.
அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. அந்த வகையில் சூழலிற்கு விடப்படும் பாதார்த்தங்கள் அல்லது வாயுக்கள் அல்லது அங்கு தாவர விலங்கினங்கள் வாழ்வதற்கு பொருத்தமில்லாத மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். எவ்வாறு இருந்தும் மேலே கூறப்பட்ட வரைவிலக்கணத்தினை ஒருபடி முன்னோக்கி பார்த்தால் சூழல் மாசடைதல் என்பதற்கு மிகப்பபொருத்தமான வரைவிலக்கணம் பின்வருமாறு முன்வைக்கப்படுகின்றது. “தொகுதியில் அல்லது சூழலில் ஏற்படுத்தப்படும் பௌதீக இரசாயன உயிரியல் இயல்புகளின் விரும்பத்தகாத மாற்றம் அல்லது ஏற்படுத்தப்படும் ஆபத்தான நச்சுவிளைவுகளின் தொற்றுகையே சூழல் மாசடைதல்” எனப்படும்.
இவ்வாறு சூழல் மாசடைவதன் விளைவாக சூழலில் உள்ள மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களும் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச் சூழலுக்கு சர்வதேச ரீதியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு  வருகின்றது. குறிப்பாக நாடுகளின் நகர்ப்புற அபிவிருத்தி காரணமாக இன்று நகரச்சூழல் பெருமளவில் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. நகரங்களில் வசதிவாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக கிராமப்புற மக்கள் நகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயர்கின்றனர். nயுமாத்த குடித்தொகையில் 40 வீதமான மக்கள் நகரப்பகதிகளை நோக்கி இடம்பெயர்கின்றனர். இதன் காரணமாக கிராமங்களை விட குடித்தொகைச்செறிவு நகரங்களில் அதிகமாக உள்ளதுடன், சூழல் மாசடைதல் பிரச்சினைகளும் அதிகமாக காணப்படுகின்றது. இந்த வகையில் பின்வரும் வகையில் சூழல் மாசடைதல் இடம்பெறுகின்றது.
  • நிலம் மாசடைதல்
  • நீர் மாசடைதல்
  • வளி மாசடைதல்
  • ஒலி மாசடைதல்
04.      பூகோள சுற்றாடல் பிரச்சினைகள்:
உலகின் சகல உயிரினங்களும் ஒரேயொரு வாழ்விடம் புவியாகும். இந்தப் பவியில் இன்றைய மிதமிஞ்சிய குடித்தொகையும், அதன் எல்லையற்ற முயற்சியும் முக்கிய துறைகளின் வளர்ச்சியும் எல்லைக்கே சென்றுள்ளது. குறிப்பாக கைத்தொழில், விவசாயம், கால்நடைவளர்ப்பு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொலைத்தொடர்புகள், ஆயுத் உற்பத்திகள் போன்றவைகள் சூழலை ஆதாரமாக வைத்தே அவை வளர்ச்சியின் எல்வைக்கே சென்றுள்ளது. இத்துறைகளின் வளர்ச்சியினால் இன்று புவிக்கோளமானது உலகளாவிய ரீதியல் பல சூழல் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. அப்பிரச்சினைகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
பூகோள வெப்பமாதல்

1. பச்சை வீட்டு விளைவும், பூகோள வெப்பமாதலும்
2. ஓசோன் படைத் தேய்வு
3. காடழிப்பும் உயிரினப் பல்வகைமை அழிவும்
4. பாலைவனமாதல்
5. அமிலமழை

4.1 பச்சை வீட்டு விளைவும் பூகோள வெப்பமாதலும்:

புவிக்கோள மாசடைதல் நடவடிக்கையில் பச்சை வீட்டு விளைவும் ஒன்றாகும். பச்சை வீட்டுவிளைவானது பூமி அதிகளவில் வெப்பமடைவதால் நிகழ்கின்றது. இத்தாக்கம் “பச்சை வீட்டு விளைவு (Green House Effect)” என அழைக்கப்படும். இத்தாக்கம் பற்றி முதன் முதலில் 1827ல் Baron Jean Bastiste Fauriner என்பவரால் விபரிக்கப்பட்டது. இத்தாக்கமானது பூமியை வெப்பமாக்கும் காபனீரொட்சைட்டினதும், மெதேன், நைதரசன்ஒட்சைட்டு, ஓசோன், நீராவி குளோரோபுளோரோகாபன்கள் ஆகியவற்றின் பொறிமுறை செயற்பாடாக காணப்படுகின்றது. சீரற்ற காலநிலை நிலவும் குளிரி பிரதேசங்களில் தாவரங்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் கண்ணாடியிலான மூடிய அமைப்பு முறையையே பச்சைவீடு என அழைக்கப்படுகின்றது.
பச்சை வீட்டு விளைவு
ஞாயிற்றில் இருந்துவரும் வெப்பக்கதிர்கள் வளிமண்டலத்தை ஊடறுத்து பூமியை அடைந்து உறிஞ்சல், தெறித்தல், சிதறல் போன்ற செயல்முறைகளுக்கு உட்பட்டு சமும்திரம்,நிலம்,தாவரப்போர்வை என்பவற்றை வெப்பமாக்கிப் பின் நெட்டலைக்கதிர்வீசலாக மீண்டும் புவியிலிருந்து வானவெளிக்குத் திருப்பியனுப்பப்படுகின்றது. இதில் பெருதளவான பகுதி வளிமண்டலத்தினால் உறிஞ்சப்பட மிகுதி வானவெளிக்கு அனுப்பப்படுகின்றது. ஒரு பகுதி மீள்கதிர்வீசலாகப் புவிக்குத் திருப்பியனுப்பப்படுகிறது. ஞாயிற்றிலிருந்து உள்வரும், வெளிச்செல்லும் சக்தியானது வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டு(CO2), மெதேன்(CH4), நைதரசன் ஒட்சைட்டு(NO2), ஓசோன்(O3), நீராவி(H2O), குளோரோபுளோரோ காபன்கள்(CFCs) போன்றவற்றினால் உறிஞ்சப்படும் செயற்பாடு பச்சைவீட்டு விளைவாகும்.
கடந்த காலங்களில் மனித நடவடிக்கைகளினால் வெளிவிடப்படும் வாயுக்களின் பங்களிப்பினை மாற்றியமைப்பதோடு இவ்வாயுக்களின் பச்சைவீட்டுச் செயற்பாட்டையும் பாதிக்கின்றது. இதனால் வளிமண்டலம், உயிர்மண்டலம், நீர்மண்டலம், புவிமண்டலம் என்பவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இவ்வாயுக்களின் அதிகரிப்பால் வெப்பநிலை அதிகரித்தல், மழைவீழ்ச்சி மாதிரியில் வேறுபாடு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, நீரியல் வட்டத்தில் பாதிப்பு, சூறாவளிகள், புயல் போன்றவற்றின் உருவாக்கம், சமுத்திர நீரோட்டங்களின் திசை மாறுதல், தாவரங்கள் விலங்குகளில் ஏற்படும் தாக்கம் இவற்றோடு சக்திப்பிரயோக முறை, சுற்றுச் சூழல் மாசடைவு, விவாசாயம், காடுவளர்ப்பு, மீன்பிடி என்பனவற்றிலும் அத்தோடு மனிதனின் சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தகின்றது. (Edna Zeavin 1992)
4.2 ஓசோன்படைத் தேய்வு:

ஓசோன்படைத் தேய்வு
4.3 காடழிப்பும் உயிர்ப்பல்வகைமை அழிவும்:

காடழிப்பும் உயிர்ப்பல்வகைமை அழிவும்
4.4 பாலைவனமாதல்:
பாலைவனமாதல்
4.5 அமிலமழை:
அமிலமழை
5.  இலங்கையின் சுற்றாடல் பிரச்சினைகள்:
மூன்றாம் மண்டல நாடுகளின் சமூக பொருளாதாரம் பின்தங்கிய நிலைமை காரணமாக அவை சூழலை கருத்தில் கொள்ளாது அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன. இந்நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் இவ்வாறான செயற்பாடு காணப்படுகின்றது. பாரம்பரிய சுற்றாடலுக்கு வழங்கப்பட்ட மரியாதை, அது பற்றிய எண்ணக்கரு அதைவிட மேலாக இயற்கையுடன் நட்புறவான நடவடிக்கை மூலமாக புராதன இலங்கையின் சமூகத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக காணப்பட்ட சுற்றாடலைப் பேணல் என்பன நவநாகரீக இலங்கையில் முக்கியத்துவம் இழந்து வருகின்றது.
இலங்கையில் சூழல் மாசடைதல்

பொருளாதார அபிவிருத்தி சுகாதாரமான சுற்றாடலில் தங்கியுள்ளது. முக்கியமாக நாட்டின் உற்பத்தியை அபிவிருத்தி செய்தல்  மற்றும் சேவைகளை வழங்கும் கைத்தொழில்கள் குறிப்பாக சுற்றுலாத்துறை போன்றனவற்வற்றை குறிப்பிடலாம். நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஆபத்தில் இருந்து தடுப்பதற்கு நாடு எதிர்கொள்ளும் பலவகையான சூழல் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது முக்கியமானதாகும். அதாவது சனத்தொகைக்கு ஏற்ற விதத்தில் வளங்களின் நுகர்வு அதிகரித்து வருவதுடன் பண்பாட்டு சேவைகளும் விஸ்தரிக்கப்படுகின்றன. இதனால் இன்று சூழல் பிரச்சினைகளும் பண்பாட்டுச்சூழல் பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனால் பல சுற்றாடல் பிரச்சினைகளும் நகரங்களில் தோன்றியுள்ளன. 14.05.2001 இல் அமெரிக்காவில் நடைபெற்ற சூழல் மாநாட்டில் 60 தெற்காசிய பிரதிநிதிகள் உட்பட்ட ஜக்கிய நாட்டு பிரமுகர்களும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் 10 நாடுகளில் சிறந்த சுற்றாடல் நகரமாக கொழும்பு தெரிவு செய்யப்பட்டு பரிசும் வழங்கப்பட்டது எனினும் இலங்கையில் சுற்றாடல் பிரச்சினைகள் காணப்படுவது தவிர்க்கமுடியாததாகி விட்டது.
5.1  நிலம் மாசடைதல்:
நிலம் மாசடைதல் என்பதற்கு நுட்பமான வரைவிலக்கணத்தைக் கூறுவது கடினமாக உள்ளது. ஒரு பரந்த அர்த்தத்தில் கூறுவதாயின் ஒன்று அல்லது பல இயற்கையான மானிட தூண்டற் காரணங்களால் நிலத்தின் பௌதீக இராசாயண உயிரியற் தரம் பாதிக்கப்படுதல் நிலம் மாசடைதல் எனப்படும். பொதுவாக மண் வளமிழத்தல் அல்லது நிலச்சீர்குலைவு முக்கிய பிரச்சினையாகின்றது.
நிலம் மாசடைதல்

இயற்கையான, மானிட காரணிகளின் விளைவால் நிலவளம் குறைவடைகின்றது. அந்தவகையில் நாடு பலவகையான நிலச்சீர்குலைவுக்கு முகம் கொடுத்துள்ளது. இயற்கைக் காரணிகளாக மண்தின்னல், நிலச்சரிவு, காற்று, கடல்அலை, புவியதிர்ச்சி, காலநிலை மாற்றம், தின்னல் செயற்பாடுகள் என்பனவாகும். அவற்றில் மனிதனால் தூண்டப்பட்டவையாக விவசாய நடவடிக்கை, சேதனப்பொருட்களின் இழப்பு, காடழிப்பு, சேனைப்பயிர்ச்செய்கை, கைத்தொழில் நடவடிக்கை, உவராதல், பாலைவனமாதல், என்பவற்றுடன் சனத்தொகை, வறுமை, நிலவுடமைப்பிரச்சினை, முறையற்ற நிர்வாகம், பொருத்தமற்ற விவசாயம், அரச கொள்கைகள், சுகாதாரப்பிசை;சினைகள், அறிவின்மை, விவசாய இரசாயனங்களின் அதிகமான பாவனை, கவனயீனமான கழிவகற்றல், யுத்த நடவடிக்கை போன்ற மானிடக்காரணிகளும் மேற்கொள்ளப்படும் செயற்பாட்டினாலும் இயற்கையின் செயற்பாட்டிலானலும் நிலமானது மாசடைகின்றது.
5.2  நீர் மாசடைதல்:

இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுள் நீர் மாசடைதல் முக்கியமானதாகும். இலங்கை நீர்வளம் மிக்க ஒரு நாடாக கருதப்படுகின்ற போதிலும் இவ்வளம் விரைவாக மாசடைந்து வருவது கவனத்திற்குரிய விடயமாகும். நீரின் பௌதீக, இரசாயன அல்லது உயிரியல் தன்மை போன்றவற்றில் ஏற்படும் மாற்றம் நீர் மாசடைதல் என பொதுவாக கூறமுடியும். ஏதாவது ஒரு nhதழிற்சாலையில் இருந்து கழிவு நீரோ அல்லது மலக்கழிவு நீரோ அல்லது வேறு கழிவு நீரோ அல்லது விசவாயுக்களோ அல்லது திண்மக்கழிவுகளோ நீரில் சேர்க்கபடுவதனால் அந்நீர் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு தொந்தரவு, அபாயகரம் அல்லது ஆபத்தை விளைவிக்க்கூடியளவில் திரிபுபடுத்தல் நீர் மாசடைதல் என மேலும் தெளிவாக விளக்க முடியும். அதேபோன்று வீட்டுப்பாவனை, வியாபார, தொழில்நுட்ப, விவசாய தேவைகளுக்காக தேர்ந்தெடுக்கும் நீரில் காணப்படும் தாவரங்கள், மிருகங்கள், போன்றவற்றின் நலனுக்கு அபாயகரமானதாக நீரின் பண்பு வேறுபடுதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் நீர் மாசடைதலை விளக்க முடியும். இந்தவகையில் பின்வரும் வழிகள் மூலம் இலங்கையில் நீர் மாசடைகின்றது.
நீர் மாசடைதல்
  • நகர்ப்புறக்கழிவுகள்
  • கைத்தொழில் கழிவுகள்
  • விவசாய நடவடிக்கை கழிவுகள்
  • எண்ணெய்க் கழிவுகள்
  • கிராமிய சுகாதார முறைகள்
  • ஏனைய காரணிகள்
இவ்வாறான செயற்பாடுகளுடன் இயற்கை அனர்த்தங்களினாலும் நீர் வளமானது நாட்டின் பல பாககளிலும் மாசடைந்து வருகின்றது.
5.3 வளி மாசடைதல்:

இலங்கையில் அண்மைக்காலமாக வளி மாசடைதல் பிரச்சினையானது உணரப்பட்டு வருகின்றது. தூய்மையற்ற நிலைமை அல்லது சாதாரண கூறுகள் மிகையாக வளிமண்டலத்திற்கு விடுவிக்கப்படும் போது வளி மாசடைதல் ஏற்படுகின்றது. அதாவது சாதாரண வளியிலுள்ள வாயுக்களும், வேறு பதார்த்தங்களும் தவிர்ந்த தூசு, வேறு வாயுக்கள் புகை முதலியன சில குறிப்பிட்ட அளவுகளிலும் அதிகமாக இருந்து மனித, விலங்கு, தாவர உயிர்வாழ்க்கைக்குத் தீங்கை ஏற்படுத்துமே ஆனால் விமண்டலம் மாசடைந்துள்ளது எனப்படுகின்றது.
வளி மாசடைதல்
வளியில் உள்ள சில வாயுக்கள் அவை இருக்க வேண்டிய செறிவிலும் அதிகம் இருப்பினும் மாசாக மாறலாம். வளி மாசாக்கிகளை பிரதான, துணையான வளி மாசாக்கிகள் எனப் பாகுபடுத்தலாம். உற்பத்தித் தொழிற்சாலைகள், வாகனங்கள், பொதுமக்களின் செயற்பாடுகள் போன்றவற்றிலிருந்து நேரடியாக வளியினுள் வெளிச் செலுத்தப்படுவது பிரதான வளி மாசாக்கிகள் ஆகும். இவற்றுள் இலகுவில் தாக்கமடையக்கூடிய சேதன மூலக்கூறுகள் (VOCS),நைதரசன் ஒட்சைட்டு(NO2), கந்தகவீரொட்சைட்டு ஒளி இரசாயன ஒட்சியேற்றம் என்பன அடங்கும். வளியிலுள்ள பதார்த்தங்களிடையே இரசாயனத்தாக்கங்கள் நடைபெறும் பொழுது வெளிச்செலுத்தப்படுவது துணையான வளி மாசாக்கிகள் எனப்படும். இவற்றுள் நைதரசனீரொட்சைட்டு(NO2), ஒளி இரசாயன ஒட்சியேற்றம் என்பன அடங்கும். குறிப்பாக இலங்கையில் கைத்தொழில் நடவடிக்கை, விவசாயத்தில் உரப்பாவனை, கிருமிநாசினி பாவனை, காடழிப்பு, போக்குவரத்து வீடமைப்பு குடியேற்றத்திட்டம் போன்ற பல்வேறு காரணங்களுடன் கழிவுகள் அழுகுதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் வளி மாசடைகின்றது. இதில் வாகன புகையினால் அதிகளவு மாசடைவதாக அறியப்பட்டுள்ளது. இதனால் நோய் ஏற்படல், அங்கிகள் இறத்தல், வலிமை இழத்தல் போன்ற பல்வேறு விளைவுகளால் உயிர்ச் சூழல் சமனிலை குழம்புகின்றது.
5.4 ஒலி மாசடைதல்:
ஒலி மாசாதல் என்பதற்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் “கேட்போரால் சகிக்க முடியாமல் காணப்படும் சத்தம்” என வரையறுக்கப்படும். வேறு வகையில் கூறுவதாயின் விரும்பத்தகாத, கஸ்ரப்படுத்துகின்ற அல்லது தீங்குதரக்கூடிய எல்லாவகையான சத்தங்களும் ஒலி மாசாதல் எனப்படும். நகரப்பகுதிகளிலே அதிகரித்த வாகன இரைச்சல் மற்றும் விமானங்கள், றைல் வண்டிகளினுடைய சகிக்கமுடியாத சத்தம், தொழிற்சாலைகள், மின்பிறப்பாக்கிகள், பொப்பிசைகள் என்பனவும் ஒலி மாசடைதலுக்கு காரணமாகின்றது. இலங்கையில் பல்வேறு இடங்களில் கல் உடைக்கும் தொழில் மேற்கொள்ளப்படுவதனால் பாறைகளை துளைப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தாலும், டைனமைற் போன்ற வெடிபொருட்களை பயன்படுத்துவதாலும் உருவாக்கப்படும் பெரும் ஒலி சூழலை மாசாக்குகின்றது. இலங்கையின் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஒலி அல்லது அதிர்வின் மட்டம் மக்கள் வாழும் இடத்திலும் தொழிற்சாலைகள் உள்ள இடத்திலும் சர்வதேச முறை சார்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒலியின் அனுமதிக்கப்படும் நிலையானது இடத்தில் தங்கியுள்ளது. இதனை கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது.
இட அடிப்படையில் அனுமதிக்கப்படும் ஒலி அளவு
ஒலி மிக்க கூடுமாயின்  கேட்டல் தன்மையை நிரந்தரமாக பாதிக்கின்றது. அதிகரித்த சத்தமானது மனிதனுக்கு உயர் இரத்த அழுத்தம், தலையிடி, தூக்கமின்மை, கேண்மையைக் குழப்புதல், வேலை நேரங்களில் தடங்கலை ஏற்படுத்துதல் போன்ற விளைவுகளைத் தருகின்றது. மனித ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒலி அழுத்தம் 25- 45 டெசியல் ஆகும்.
ஒலி மாசடைதல்
5.5  காடழிப்பும் உயிரியல்பல்லகைமையின் இழப்பு:

மழைவீழ்ச்சி, தரையுயற்சி வேறுபாடு மற்றும் மண்ணின்தன்மை என்பவற்றின் காரணமாக இலங்கை பலவர்க்க காடுகளைக் கொண்டு காணப்படுகின்றது. கடந்த இரு தசாப்தங்களாக நீர்பாசனத்தேவைகள், விவசாயம், குடியிருப்புக்களை அமைத்தல், நீர்மின்சார அபிவிருத்தி, மரத்தேவைகள், சேனைப்பயிர்ச்செய்கை, யுத்த நடவடிக்கைகளாலும் சூறாவளி, வெள்ளம், மண்ணிரிப்பு, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 1983ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 54000 ஹெக்ரெயர் காட்டுநிலப்பரப்பு குறைவடைந்து வருகின்றன. தற்போது 24% ஆக காணப்படும் நெருங்கிய விதானத்தையுடைய காடுகள் 2030ஆம் ஆண்டில் 17% ஆக குறைவடையலாம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
உயிர்பல்வகைமையின் இழப்பு
உயிரியல் பல்வகைமையில் இலங்கை மிக உன்னதமான இடத்தில் உள்ளது. ஆசிய பிராந்தியத்தில் இலங்கையே ஒரு அலகு நிலப்பரப்பில் அதிகூடிய உயிரியல் பல்வகைமையை கொண்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. குறிப்பாக பூக்கும் தாவரங்கள் மற்றும் பலவகைப்பட்ட விலங்குகளையும் கொண்டுள்ளது. துரிதமாக அதிகரித்துவரும் சனத்தொகையின் தேவைகளை ஈடுசெய்யும் நிலையில் நுகரப்படும் விலங்கினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. இதன் அழிவுக்குரிய முக்கிய காரணகளாக சேனைப்பயிர்ச்செய்கை, அத்துமீறிய குடியிருப்புக்களுக்காக சட்பூர்வமற்ற முறையில் காடுகளை அழித்தல் ஈரநிலங்களை மூடுதலும் வேறு தேவைகளுக்காக மாற்றுதலும், வர்த்தக பெறுமான நோக்கில் அளவுக்கதிகமான உயிரியல் வளங்களின் நுகர்சிசி, சுண்ணாம்பு தொழலுக்காக முருகைக் கல் பாறைகளையும் முக்கிய வாழிடங்களையும் அழித்தல், உள்நாட்டு கரையோர நீர்நிலைகளை மாசாக்கல் என்பனவாகும். தெரிவு செய்யப்பட்ட தாவர விலங்குப்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி குறைந்தது 600 விலங்கினங்களும், 700 வகையான தாவரயினங்களும் தேசிய ரீதியில் அழிந்து போகக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
5.6 உள்நாட்டில் நீர்வளங்களின் முகாமையின்மையால் உண்டாகும் பிரச்சினைகள்:
இலங்கையினுடைய உள்நாட்டு நீர்வளமே குடித்தல்,விவசாய நீர்பாசனம், வீட்டுப்பாவனை, நீர்மின்சாரம் மற்றும் உள்நாட்டு மீன் உணவு உற்பத்திக்குமான ஒரேயொரு வளமாக உள்ளது. எனினும் முற்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பலவகையான நீர்பாசனம் மற்றும் நீர்மின்சார திட்டங்களுக்கு கிடைக்கபெற்ற நீரை அதிகளவு பயன்படுத்தியதன் காரணமாக ஆற்றின் நீர்வழங்கும் பகுதிகளின் நீரோட்டம் மற்றும் நீர்ச்சமநிலை என்பவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக ஆற்றின் பாதையை திசைதிருப்பும் வேளை அது நிலையானதாக மாறுவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. அதேவேளை ஈரவலய ஆறுகளில் அதிகளவு படிவுகள் ஏற்படல் போன்ற சூழலியல் பிரச்சினைகள்  தோன்றுகின்றது.
நீர் முகாமையின்மை
5.7  கழிவகற்றலில் ஏற்படும் பிரச்சினை:
இலங்கையில் அண்மைக்காலமாக உள்ளுராட்சி அதிகாரசபையால் நாள் ஒன்றுக்கான கழிவு சேகரிப்பு 2694 தொன்னாக காணப்படுகின்ற போதிலும் முறையற்ற கழிவகற்றல் சுற்றாடலுக்கு அச்சுறுத்தலான நிகழ்வாக உள்ளது. இது நகரங்களுக்குரிய முக்கிய பிரச்சினையாக உள்ளது. கழிவு எவ்வளவு வெளிவிடப்படுகின்றது என்பது சேகரிக்கப்படும் கழிவின் அளவில் தங்கியுள்ளது. இலங்கையில் இலங்கையில் கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளாக திருப்திரமான முறையில் கழிவு சேகரிக்கும்முறை இன்மை, திண்மக்கழிவுகளை இடுவதற்குரிய ஒழுங்கான பொறியியல் முறையிலமைந்த நிலமீழநிரப்புகை இன்மை மற்றும் தொழிற்சாலைகள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை அகற்றுவதற்குரிய முறையான வசதிகள் இல்லாமை போன்றன காணப்படுகின்றன.
கழிவகற்றல்

5.8 கரையோர மண்ணிரிப்பு:
இலங்கை கரையோர மண்ணிரிப்பு பிரச்சினைக்கு உள்ளாகின்றது. ஆறு மற்றும் கடற்கரையோரங்களில் மணல் அகழ்வு, முருகைக்கல் அகழ்வு, பொருத்தமற்ற கடற்கரையோர கட்டட நிர்மாணிப்புக்கள் போன்ற மனித நடவடிக்கைகளால் பாரியளவில் கரையோர மண்ணரிப்பு இடம்பெறுகின்றது. இவற்றுக்கு எதிரான சட்டம் காணப்பட்ட போதும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் குறைவான ஆளுமை காரணமாக பலவீனமடைந்து காணப்படுகின்றது. முருகைக்கல்லில் இருந்து எடுக்கப்படும் சுண்ணாம்பு, கட்டட நிர்மாணிப்புக்கான ஆற்றுமணல் என்பற்றுக்கு ஈடாக பொருளாதார மற்றும் பௌதீக ரீதியில் மாற்று வழிகள் இல்லாததும் இதற்கு காரணமாக அமைகின்றது.
கரையோர மண்ணிரிப்பு
5.9 பண்பாட்டுச் சூழல் மாசடைதல்:

இலங்கையில் சகல பாகங்களிலும் இன்று மதுபானம், போதைப்பொருட்கள் என்பனவற்றின் பாவனை இளைஞர்கள் மத்தியில் பரவியிருப்பதுடன், உல்லாசப் பயணிகள் வருகையுடன் எயிட்ஸ் போன்ற கொடிய நோய்களும் பரவியுள்ளது. இது நகர்ப்பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகின்றது. மேலும் மது அருந்துவதால் சண்டைகள், பிணக்குகள், கொலைகள் என்பன ஏற்படுவதுடன் ஆயுள் எதிர்பார்ப்பையும் குறைக்கின்றது. அதாவது கசிப்பு எனப்படும் சாராயத்தினால் பலர் இறந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பண்பாட்டு சூழல் பிரச்சினைகளும் காணப்படுகின்றது.
6. கழிவு:
வெளியீட்டின் மூலம் பெறப்படும் பயனற்ற பொருட்கள் அல்லது ஒரு உற்பத்தி செய்முறையின் அல்லது ஒரு நிகழ்ச்சியின் பின் பெறப்படும் பொருட்கள் கழிவு என அழைக்கப்படும். இவை பயனற்ற பொருட்களாகவே இருக்கும். அதாவது மனிதன் அன்றாட தேவைகளை நிறைவு செய்வதற்காக பல்வேறு பொருட்களை பயன்படுத்துகின்றான். இவ்வாறு பயன்படுத்தும் போது தேவையற்றவற்றையும் பயன்பாட்டுக்கு உட்படுத்த முடியாத திண்ம, திரவ பொருட்களை கழிவாக கருதுகின்றனர். இவை மனித தலையீட்டின் மூலம் பயனுள்ள வளமாக மாற்றப்படலாம். இலங்கையில் வன மற்றும் சூழல் அமைச்சானது கழிவு என்பதனை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. “பொது இடங்கள், வீடு, வர்த்தகம், கைத்தொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் இருந்து தோன்றும் திரவ மற்றும் திரவமில்லாத பொருட்களே கழிவாகும்”. கழிவுகள் பொதுவாக மூன்று பிரிவாக பிரிக்கப்படும்.
கழிவுகள்
  • திண்மக்கழிவுகள்
  • திரவக்கழிவுகள்
  • வாயுக்கழிவுகள்
6.1 திண்மக்கழிவு என்றால் என்ன?
திண்மக்கழிவு என்பது நாளாந்த வாழ்க்கைச் செயற்ப்பாடுகளிலிருந்து உருவாகும் பொருளாதார பெறுமதியற்ற திண்மப்பொருட்கள் என விபரிக்கப்படுகின்றது. அதாவது வீடுகள், வைத்தியசாலைகள், வர்த்தகவியாபார, கைத்தொழில் மற்றும் விவசாய செயற்ப்பாடுகளினால் மட்டுமன்றி பொதுத்துறைகளாலும் வெளியேற்றப்படுகின்ற திரவமல்லாத கழிவு திண்மக்கழிவு என வரையறுக்கப்படுகின்றது. திண்மக்கழிவானது உணவுக்கழிவுகள், தேவையற்ற துணிகள், தோட்டக்கழிவு, கட்டட நிர்மாணக்கழிவு, தொழிற்சாலைக்கழிவு, கடதாசி, உலோகங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி முதலானவற்றையும், பொதி செய்வதனால் உண்டாகும் கழிவுகள் போன்ற பல்வேறுபட்ட வித்தியாசமான பொருட்களினை உள்ளடக்குகின்றது.
திண்மக்கழிவுகளானது நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும், தொழிற்சாலைக்கு தொழிற்சாலையும் வேறுபடுகின்றது. சிலவேளைகளில் குறிப்பிட்ட சில பொருட்கள் குறித்த நாட்டினில் அல்லது தொழிற்சாலையினால் அல்லது நபரினால் கழிவுகளாகக் கருதப்படலாம். ஆனால் ஏனைய நாடுகள் அல்லது தொழிற்சாலைகள் அல்லது நபர் மேற்குறிப்பிட்ட கழிவுகளை கழிவுகளாகக் கருதாத சம்பவங்களும் காணப்படுகின்றன. வீதி விபத்தினால் கொல்லப்பட்ட நாய், கோழி போன்றவற்றின் இறந்த உடலுக்கு பெறுமதி இல்லாமையால் அது கழிவாகக் கருதப்படுகின்றது. அதே சமயம் கோழியின் உடலுக்கு பெறுமதி உள்ளதால் அது கழிவாகக் கருதப்படுவதில்லை. இருந்த போதிலும் நாய் இறைச்சி நுகரப்படும் நாடுகளினில் நாயின் இறந்த உடலுக்கு பெறுமதி காணப்படுகின்றது.
எங்களுடைய நாட்டில் கடதாசி, தேங்காய்சிரட்டை, பிளாஸ்ரிக் என்பனவற்றை திண்மக்கழிவுகளாக கழிக்கின்றார்கள். ஊண்மையில் இவை பெறுமதியுள்ள வளங்களாகும். உகந்த முகாமைத்துவத்தின் ஊடாக இப்பொருட்க்களிலிருந்து பல நன்மைகளினை பெற்றுக்கொள்ளலாம். நன்கு திட்டமிடப்பட்ட நாடுகள், நகரங்களின் பூங்காக்கள், தெருக்கள், வீதிகள் போன்றவற்றை அழகுபடுத்துவதற்க்காக தாவரங்கள் நாட்டப்படும் போது நகரக் கழிவுகளான தாவரப்பகுதிகள் மண்ணின் அமைப்பைப் பேணுவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நன்கு திட்டமிடப்படாத நாடுகளில் அவ்வகையான தாவரப்பகுதிகள் வளங்களாகக் கருதப்படாது கழிவுகளாகக் கருதப்பட்டு கழிவாக வெளியேற்றப்படுகின்றன.
உலகிலுள்ள பல நாடுகளில் உள்ளதைப்போல் எங்களுடைய நாட்டிலும் நகரத் திண்மக்கழிவுகளானது உள்ளுர் அதிகார சபைகளினால் அகற்றப்படுகின்றன. நச்சுத்தன்மையான கழிவுகள் வேறொரு தனிப்பட்ட வகைக்கழிவாக கருதப்படுகின்றது. இக்கழிவுகள் தொழிற்சாலைகள், மருத்துவச் செயற்ப்பாடுகளின் போது உருவாக்கப்படுகின்ற நச்சுத்தன்மையான கழிவுப்பொருட்க்களிற்க்கான முகாமைத்துவம் சிறந்த மேற்ப்பார்வையின் கீழ் செய்யப்படல் வேண்டும்.
6.2 திண்மக்கழிவுகளின் பாகுபாடு:
திண்மக்கழிவுகளானது அவை வெளிவிடப்படும் இடங்களின் அடிப்படையில் பின்வருமாறு பாகுபடுத்தப்படுகின்றது.
  • மாநகர-சபை திண்மக்கழிவுகள்
  • வீட்டுத் திண்மக்கழிவுகள்
  • சந்தை,வர்த்தக திண்மக்கழிவுகள்
  • நிறுவனத் திண்மக்கழிவுகள்
  • வீதி,கடற்க்கரைத் திண்மக்கழிவுகள்
  • நிர்மாணத் திண்மக்கழிவுகள்
  • கைத்தொழில் திண்மக்கழிவுகள்
  • விவசாயத்தினால் உருவாகும் திண்மக்கழிவுகள்
  • தீங்கு பயக்கும் திண்மக்கழிவுகள்
6.3 திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் சுற்றாடல் பிரச்சினைகள்:
  • வளி மாசடைதல்
  • நீர் மாசடைதல்
  • மண் மாசடைதல்
  • சுகாதாரப் பிரச்சினைகள்
  • உயிரினப் பல்லினத்துவத்தின் மீதான சேதங்கள்
  • இயற்கை காட்சிகளின் அழிவு
  • சமூகப் பொருளாதார பிரச்சினைகள்
6.3.1. வளி மாசடைதல்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் பிரச்சினைகளில் வளி மாசடைதல் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். பல்வேறுபட்ட நுண்ணுயிர்களால் திண்மக்கழிவுகள் பிரிந்தழிகைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இச்செயற்ப்பாடுகளின் போது காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்ப்பாட்டினால் பல்வேறுவகையான இரசாயன வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாயுக்கள் வளிமண்டலத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து துர்நாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. இவ்வாறு துர்நாற்றம் உருவாகும் காரணத்தினால் அவ்விடப்பரப்பில் வாழும் வதிவிடவாசிகளுக்கு தொல்லைகள் ஏற்ப்படுத்தப்படுகின்றன. இதனால் கழிவுகள் கழிக்கப்படும் இடங்களினைத் தெரிவு செய்தல் இலகுவான நோக்காக இருக்காது. திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்ப்பாட்டிற்கு உட்படும்போது உருவாகும் மெதேன் வாயுவானது பூகோள வெப்பமுறலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. இதுவரையில் எங்களுடைய நாட்டில் கழிவகற்றப்படும் இடங்களிலிருந்து உருவாகும மெதேனைக் குறைக்கவோ அல்லது சேகரிக்கும் வசதிகளோ காணப்படவில்லை. இதனால் எமது நாட்டில் கழிவகற்றப்படும் இடங்கள் வளி மாசடைதலின் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. பல்வேறுபட்ட திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்ப்பாடுகளின் போது உருவாகும் தூசுகளாலும் வளி மாசடைதல் ஏற்படுகின்றது. குறிப்பாக திண்மக்கழிவுகளின் காவுகையின் போதும், கழிவகற்றலின் போதும் தூசு துணிக்கைகள் பரம்பலடைகின்றது. இதனால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்ப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கைத்தொழில் கழிவுகள் கழிவகற்றலுக்கு அகப்படும்போது உருவாகும் தூசுகளால் தீராத சுவாச நோய்கள் உருவாக்கப்படலாம்.
திண்மக்கழிவுகள் எரிக்கப்படும்போது உருவாகும் பல இரநாயனக் கூறுகளானவை மனிதனுக்கு அதிகளவு தீமையை ஏற்ப்படுத்துகின்றன. இவற்றுள் இரு ஒட்சிசன் அதிக நச்சுத்தன்மையானவை. இவ் இரசாயனங்கள் நீரில் கரையமுடியாதவை. ஆனால் இவை கொழுப்பில் கரைந்து நீண்ட காலத்துக்கு சுற்றாடலில் நிலைத்திருக்க கூடியவை. இக்கூறுகள் ஆபத்தான ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கக் கூடியவை. திண்மக்கழிவுகள் குறைந்த வெப்பநிலையில் எரிக்கப்படும்போது இவ்வகை இரசாயனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இவை முற்றாக பிரித்தழிவதற்கு உயர் வெப்பநிலை மிக அவசியமாகும். இதனாலேயே, பிளாஸ்ரிக் பொருட்கள் குறைந்த வெப்பநிலையில் எரிக்கப்படல் சுற்றாடலுக்கு நட்புறவான செயற்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்பாட்டிற்கு உட்படும்போது உருவாகும் மெதேன் வாயுவானது பல சந்தர்ப்பங்களில் தீப்பற்றக்கூடியதாக இருக்கலாம். பிளாஸ்ரிக் உள்ளடங்கலாக எல்லா திண்மக்கழிவுப்பொருட்களும் பல நிலைகளில் எரிதலுக்கு உட்படுத்தப்படலாம். இதனால் உயர்ந்த சுற்றாடல் மாசடைதல் நிலைமைகள் உருவாக்கப்படலாம்.
6.3.2. நீர் மாசடைதல்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை நீர் மாசடைதல் ஆகும். எமது நாட்டில் உள்ள வடிகாலமைப்புத் தொகுதியானது பல வழிகளில் தடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொலித்தீன் பைகள், தேங்காய் மட்டைகள், ஏனையவை போன்றன வடிகாலமைப்பினுள் சென்று வடிகாலமைப்புத் தொகுதியைத் தடுக்கின்றன. இவ்வாறு தடுக்கப்பட்டுள்ள வடிநீரானது நுளம்புகள்,பறவைகள்,எலிகள்,உடும்புகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களுடன் தொடர்புபட்டு வாழுகின்ற ஏனைய விலங்குகளின் இனப்பெருக்க இடங்களாகச் செயற்படுகின்றன. கிணறுகளும் வடிகால்வாய் நீரும் அவற்றினுள் கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மாசாக்கப்படுகின்றன. இதனால் உயிரியல் ஒட்சிசன் தேவை (டீழுனு), இரசாயன ஒட்சிசன் தேவை (ஊழுனு) மிக அதிகளவில் காணப்படுகின்றது. திரவக் கழிவுகளால் குடிநீர் தொற்றாக்கலுக்குள்ளாக்கப்படுவதன் மூலம் பல சுகாதாரப் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மேலும் தீவிரமான சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்ப்படுகின்றன.
6.3.3. மண் மாசடைதல்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான சுற்றாடல் பிரச்சினை மண் மாசடைதல் ஆகும். துpண்மக்கழிவுகளின் வெளியேற்றத்தினால் மண்ணினது இரசாயன, பௌதீகத் தன்மைகள் மாற்றத்திற்குட்படலாம். துpண்மக்கழிவுகளில் வேறுபட்ட வகையான பொருட்கள் காணப்படுகின்றமையால் குறிப்பாக மண்ணினது நீர் பெறுமானமானது பெருமளவில் வேறுபடுகின்றது. இதனால் தாவரங்களின் வளர்ச்சியும் மண்ணில் உள்ள உயிரினங்களின் வளர்ச்சியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் இப்பிரச்சினையானது மேலும் சிக்கலடைகின்றது. ஏல்லா இடங்களிலும் பொலித்தீன்பைகள் கொட்டப்படுவதனாலும் இவைகள் பிரிகையடைவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமையாலும் மண்ணின் வளம் குறைவடைந்து செல்கின்றது. திண்மக்கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் நிலநீர் மட்டம் குறைவடைந்து செல்லும் நிலை ஏற்படலாம்.
மண் மாசடைதல்
6.3.4. சுகாதாரப்பிரச்சினைகள்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை சுகாதார ரீதியான பிரச்சினையாகும். திண்மக்கழிவுகளுடன் பல சுகாதாரப்பிரச்சினைகள் தொடர்புபட்டுள்ளன. துpண்மக்கழிவுகளுடன் தங்களுடைய வாழ்க்கை வட்டத்தை நெருங்கிய முறையில் பேணுகின்ற ஈக்கள்,நுளம்புகள்,கரப்பான் பூச்சிகள்,எலிகள் போன்றவற்றினால் வேறுபட்ட வகைக்குரிய நோய்கள் பரப்பப்படுகின்றன. அதாவது டெங்கு,மலேரியா, மூளைக்காய்ச்சல், பைலேரியா போன்ற நோய்கள் இவ்வங்கிகளால் பரப்பப்படுகின்றன. மேலும் திண்மக்கழிவுகளுடன்  திண்மக்கழிவகற்றும் இடங்களுக்கு நோய்க்கிருமிகள் வந்து சேர்கின்றன. இதன் காரணமாக வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரப்பப்படுகின்றன.
சுகாதாரப்பிரச்சினைகள்
6.3.5. உயிரினப் பல்லினத்துவத்தின் அழிவு:
திண்மக்கழிவுகளுடன் தொடர்புபட்ட மற்றுமொரு முக்கியமான பிரச்சினை உயிரினப் பல்லினத்துவத்தின் மீதான தாக்கமாகும். திண்மக்கழிவுகள் காரணமாக தாவரங்களும், விலங்குகளும் அழிக்கப்படலாம். பேரிய பரப்பளவுகளில் அல்லது சுற்றாடல் ரீதியில் உணர்வுள்ள இடப்பரப்புக்களில் திண்மக்கழிவுகள் கழிக்கப்படும்போது உயிரினப் பல்லினத்துவம் சேதப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கப்படுகின்றன. கழிவுகள் கழிக்கப்படும் இடங்கள் காரணமாக சுற்றாடல் தொகுதி சேதப்படுத்தப்படுவதனால் உயிரினப் பல்லினத்துவம் பாரியளவில் பாதிக்கப்படலாம். திண்மக்கழிவுகளினை உண்பதன மூலம் இறக்கக்கூடிய தாவர உண்ணி விலங்குகளினை பார்க்கக்கூடியதாக உள்ளது.
அருகி வரும் உயிரினம்
6.3.6. இயற்கை அழகு அழிக்கப்படல்:

துpண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான சுற்றாடல் பிரச்சினை இயற்கை அழகு அழிக்கப்படல் ஆகும். இது நாட்டினது சுற்றுலாத் தொழிற்துறைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம். மேலும் நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனால் இயற்கை அழகு அமிக்கப்படல் பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. திறந்த வெளிகளில் திண்மக்கழிவுகள் கழிக்கப்படுவதன் மூலம் சுற்றாடலின் இயற்கை அழகு அழிக்கப்படுவதுடன் உல்லாசப் பயணத்துறைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
6.3.7. சமூக பொருளாதாரப் பிரச்சினைகள்:

திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான சுற்றாடல் பிரச்சினை சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகும். இந்த வகையில் வாழும் சுற்றாடல் துப்பரவற்றதாகவும், நிம்மதியற்றதாகவும் காணப்படுகின்றது. இதனால் நாளாந்த வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் கழிவகற்றலுக்கான செலவு, சுகாதார சேவைகளுக்கான செலவுகள் போன்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தோன்றுகின்றன.
07. முடிவுரை:
இந்த அடிப்படையில் இங்கு சூழல், சூழலின் முக்கியத்துவம்,சூழல் மாசடைதல், பூகோள, இலங்கை ரீதியான சுற்றாடல் பிரச்சினைகள், கழிவு, திண்மக்கழிவு போன்றனவற்றினால் உருவாக்கப்படும் பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.